திருப்பூரில் பிரதமர் மோடி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பூரில் நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லூரில் நாளை அரசு விழா மற்றும் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், முதலில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பல்வேறு புதிய திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதனை தொடர்ந்து, நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதற்காக பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் 50 பேர் பெருமாநல்லூரில் கடந்த வியாழக்கிழமை முதல் முகாமிட்டுள்ளனர். மேலும் இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version