அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான இரண்டாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வடகொரியா கையாண்டு வந்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தைக்கு அந்நாடு முன் வந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வடகொரிய அதிபர்கள் சிங்கப்பூரில் சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் இந்த இரு நாடுகளும் விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கடந்த 18ம் தேதி வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டது.
அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருநாட்டு அதிபர்களும் இரண்டாவது முறையாக சந்தித்து பேச முடிவெடுத்துள்ளனர்.
இந்த சந்திப்பு இந்த மாத இறுதியில் வியட்நாமின் கடற்கரை நகரமான டா நாங்கில் நடக்க இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.