இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இருப்பினும் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பான வழக்கில், தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், அதை எப்போது நடத்தலாம் என்பதை மாநிலங்கள் UGC-இன் அனுமதி பெற்று முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தமிழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தேர்வுகள் நடத்துவது தொடர்பாக சாத்தியக் கூறுகளை ஆலோசித்து வருவதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகும் எனக் கூறினார். தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.