குறைபாட்டை மறைத்து ஸ்கேன் ரிப்போர்ட் அளித்ததால்தான், மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறந்ததாக கூறி காஞ்சிபுரத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்கேன் மையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம், உப்பேரி குளத்தெருவை சேர்ந்த யுவராஜ் என்பவரின் மனைவி வித்யா. கர்ப்பிணியான இவர், மூன்றாவது மாதம் முதல் தனியார் ஸ்கேன் மையம் ஒன்றில் பரிசோதனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. குழந்தை நலமுடன் இருப்பதாக ஸ்கேன் மையம் ரிப்போர்ட் அளித்து வந்த நிலையில், 9வது மாத ஸ்கேன் ரிப்போர்ட்டில் குழந்தைக்கு சிறிய நீர் கட்டி உள்ளதாக ரிப்போர்ட் அளித்தது. இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், மூளை வளர்ச்சியின்றி குறைபாடுடன் வித்யாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. குறைபாடுள்ள குழந்தை பிறந்ததற்கு, தவறான ஸ்கேன் ரிப்போட்தான் காரணம் என்று கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்கேன் மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஸ்கேன் மையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.