வெயிலின் தாக்கத்தால் சூடு பிடித்துள்ள மண்பாண்ட விற்பனை அமோகம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியில் மண்பாண்டங்கள் விற்பனை அதிகரித்துள்ளதால், தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், மண்பானைக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இயற்கையாக தண்ணீரை குளிர வைத்துத் தரும் மண்பானையை, மக்கள் விரும்பி வாங்குவதால், கீழ்பென்னாத்தூர் பகுதியில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள், ஆர்வத்துடன் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். தற்போது மோர் பானை, கூழ் பானை, குடிநீர் பானை உள்ளிட்ட பானைகள் அதிக அளவில் விற்பனையாவதால், தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மண்பாண்டங்கள் செய்ய ஏரிகளில் இருந்து மண் எடுக்கப்பட்டு, அவற்றை வெயிலில் போதியளவு காயவைத்து உதிரியாக்கி, அவற்றை பதப்படுத்தி, பின்பு மண்பாண்டம் செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள், திருவண்ணாமலை , தர்மபுரி, வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது.

Exit mobile version