கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 147-வது பிறந்த தினம் இன்று

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 147-வது பிறந்த நாளான இன்று. சிதம்பரனார் என்று தமிழ்மக்கள் எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் வ.உ.சிதம்பரம் பிள்ளை 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை, பரமாயி அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார்.

தன்னுடைய ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்ட சிதம்பரம் பிள்ளை அரசாங்க அலுவலரான திரு.கிருஷ்ணன் என்பவரிடம் ஆங்கிலமும் கற்றுத்தேர்ந்தார்.

பதினான்கு வயதில் ஓட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடிக்குச் சென்று புனித சேவியர் பள்ளியிலும், கால்டுவெல் பள்ளியிலும் கல்வி கற்றார். பின்னர் திருநெல்வேலியில் உள்ள இந்துக் கல்லூரியிலும் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.

தன் தந்தை உலகநாதன் பிள்ளையைப் போல தானும் ஒரு நல்ல வழக்கறிஞராக வர வேண்டும் என்று விரும்பிய வ உசி , திருச்சியில் சட்டக் கல்வியை முடித்து தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.

ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் மிகத்தீவிரமாகக் நடந்துக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில், வ.உ.சி-யின் நெஞ்சில் தேச பக்தியும், விடுதலை வேட்கையும் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதுவே பின்னாளில் அவரை ஒரு ஆற்றல்மிக்க சுதந்திரப் போராளியாக பரிணமிக்கவும் செய்தது.

‘சுதேசியம்’ என்பது சுதந்திரத்தின் திறவுகோல் என்று விளக்கமளித்த வ.உ.சி., ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி நாவாய்ச் சங்கம் எனும் பெயரில் கப்பல் கம்பெனியைத் ஆரம்பித்து தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்கினார்.

ஆங்கிலேயருக்கு எதிராகப் பேசினாலே குற்றம் என்று கருதப்பட்ட அந்த காலகட்டத்தில் சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்கி, ஆங்கிலேயருக்கு எதிராகக் கப்பலோட்டிய வ.உ.சி. என்ற தமிழனின் வீரத்தை அகிலமே வியந்து போற்றியது.

மஹா கவி பாரதியின் நெருங்கிய நண்பரான இவர், தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க, சுப்பிரமணிய சிவாவுடன் கைகோர்த்தார்.

அதன், ஒருகட்டமாக தூத்துக்குடியில் அந்நியத் துணிகளைத் தீயிட்டு எரிக்கும் அறப்போரை 1905-ம் ஆண்டு வெற்றிகரமாக நடத்திக்காட்டினார் வ.உ.சி.

தூத்துக்குடியில் ஆங்கிலேயரால் நடத்தப்பட்ட ”கோரல் மில்” என்ற நூற்பாலையின் நிர்வாகத்தினரை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வ.உ.சி, தொழிலாளர்கள் சார்பில் அன்றைய சப்-கலெக்டர் ஆஷ் துரையுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் மூலம், இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற முதல் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, அவர்களின் கோரிக்கையை வென்றெடுத்தவர் என்ற பெருமையை பெற்றார். .

இந்நிலையில்தான், 1908ஆம் ஆண்டும் வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகிய இருவர் மீதும் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, சுப்ரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகளும் , வ.உ.சி.க்கு 40 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை சிறையில் கல்லுடைத்து, செக்கிழுத்து ஆங்கிலேயரால் சித்திரவதைகளுக்கு ஆளான வ.உ.சி, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்ததில் தண்டனைக்காலம் ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. பின்னர் 1912-ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி , சொத்து சுகங்களை இழந்து, சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையை அடைந்தார். சைக்கிளில் வைத்து, வீதி வீதியாக எண்ணெய் விற்று பிழைப்பு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

மிகச்சிறந்த தமிழ் அறிஞராகவும், நூல் பதிப்பாளரகவும் திகழ்ந்த வ.உ.சி பல அரிய தமிழ் நூல்களுக்கும் உரையெழுதி வெளியிட்டவராவார்.

ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் தன்னுடைய செல்வங்களையெல்லாம் இழந்து, வறுமையில் வாடிய வ.உ.சி 1936-ம் ஆண்டு நவம்பர் 18 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார். அவரின் இறப்பு உலகம் முழுதும் இருந்த அத்தனை தமிழர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியது. பாரத தேசத்தின் விடுதலை ஒன்றையே உயிர்மூச்சாகக் கொண்டு தனது தொழில், சொத்து, சுகம், வாழ்க்கை என அனைத்தையுமே தியாகம் செய்த வ.உ.சிதம்பரம் பிள்ளையையின் 147-வது பிறந்தநாளான இன்று அவரின் தியாகத்தைப் போற்றுவோம்.

Exit mobile version