நெய்தல் நிலத்தின் ராஜ உணவான கருவாடு

மீன்பிடி தடைக்கால எதிரொலியால் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது கருவாடு விற்பனை.

உவரியில் வலை வீசி களைத்த கரங்கள், உப்பில் தோய்த்து உன்னதத்தை விளைவிக்க தொடங்கியிருக்கின்றன. நெய்தல் நிலத்தின் ராஜ உணவான கருவாடு எப்படி தயாராகிறது…?

 

கருவாடுகள் அசைவ உணவுகளின் அதிசயம்; புலால் பிரியர்களின் பொக்கிஷம்; அதன் மணம் அலாதியானது; அதன் சுவை மெய் மறக்க செய்யும்.

கடக்கும் எவரையும் கவனம் குவிக்க செய்வது கருவாடுகளின் குணம். முதல் நுகர்வில் முகம் சுழிக்கச் செய்தாலும், நாசிக்குள் இறங்க இறங்க நடனத்தை தருவிக்கிறது அதன் வாசனை.

கிராமங்களை காட்டிலும், நகரத்து சமையலறைகளில் கருவாடு மணப்பது குறைவு. ஆனால், மீன் பிடி தடைக்காலம் அவர்களையும், அந்த அற்புதத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது.

வரத்து குறைவின் காரணமாக, அயிரை மீன், சுறா மீன் அதிக விலை விற்பதால், கருவாட்டு கடைகளை நோக்கி கால்களை திருப்பியிருக்கிறது திருவாளர் பொது ஜனம்.

தமிழக கடலோர பகுதிகள் அனைத்திலும் கருவாடு தயாரானாலும் கூட, நாகை கருவாட்டிற்கு நாடு கடந்தும் ரசிகர்கள் உண்டு.

கருவாட்டு தயாரிப்பின் ஹாட் ஸ்பாட் என தமிழக அரசு தராளமாக நாகையை அறிவிக்கலாம்.

ஆழியில் இருந்து மீன்களை சேகரித்து, அளவான உப்பில் தோய்த்து, அடிக்கும் வெயிலில் உலராமல் உலர்த்தி, காய்ந்த மலர் போல இருக்கும் அந்த கருவாடை எடுத்து அடுக்கினால், அதை நாவில் சூடிக் கொள்ள சுத்துப்பட்டு சனமும் முண்டியடிக்கும்.

கத்தரிக்காய்-கருவாடு, மொச்சை – கருவாடு, உருளைகிழங்கு – கருவாடு என ஒப்பற்ற பல COMBO-க்கள் தமிழர்களின் தரமான கண்டுபிடிப்புகளில் ஒன்று.
கறி இனிது; மீன் இனிது என்பர் கருவாடு மணம் அறியாதவர்…..

Exit mobile version