தேசிய விளையாட்டு தினமான இன்று, தமிழகத்தில் விளையாட்டுத்துறையின் பங்கு என்ன? என்னென்ன வசதிகள் உள்ளன? விருதுகளைப் பெற்ற தமிழக சாதனையாளர்கள் யார்? சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் அளவிற்கு தமிழகத்தில் சர்வதேச உள்கட்டமைப்புள்ள விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. 1993ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் 44 கோடி ரூபாய் செலவில் 40 ஆயிரம் பார்வையாளர் இருக்கைகளைக் கொண்ட ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் கட்டப்பட்டது. கால்பந்து மைதானம் மற்றும் ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்துடன் செயற்கை இழை தடகள பாதை அமைக்கப்பட்டதுடன், அனைத்து விளையாட்டு போட்டிகளையும் நடத்தும் வகையில், பல்நோக்கு உள்விளையாட்டரங்கமும் கட்டப்பட்டது. 1993ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டிக்குப் பின்னர் 1995 ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டியும், 1998ஆம் ஆண்டு WORLD GRAND PRIX கைப்பந்து போட்டியும் இங்கு நடத்தப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம், வேளச்சேரி நீச்சல் குளம், எழும்பூர் ஹாக்கி அரங்கம் என அனைத்தும் சர்வதேச தரத்துடன் கட்டபட்டுள்ளன. விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் மட்டுமல்லாமல் பள்ளிச்செலவையும் ஏற்று வருகிறது தமிழக அரசு. இத்தகைய நடவடிக்கைகளால் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 50 பேர் அர்ஜுனா விருது பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே அர்ஜுனா விருது பெற்ற முதல் பெண், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை விஜயலட்சுமி ஆவார்.
சிறந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியா விருதை ரமணாராவ், ஸ்ரீதரன் ஆகியோர் பெற்றுள்ளனர். டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் ஸ்ரீனிவாசனும் துரோணச்சாரியா விருதை வாங்கியுள்ளார். செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றுள்ளனர். அந்த வரிசையில் மாற்றுத்திறனாளி தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலுவும் கேல் ரத்னாவுக்கு தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.