சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்புவது பக்தர்களின் உரிமை -கேரள உயர் நீதிமன்றம்

சபரிமலையில் எந்தவித போராட்டங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள கேரள உயர் நீதிமன்றம், சபரிமலை போராட்டத்துக்கான இடமல்ல என்று தெரிவித்துள்ளது.

சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது, பக்தர்களை கண்காணிக்க 2 நீதிபதிகள், ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியோர் கொண்ட மூவர் குழுவையும் உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

சன்னிதானத்தில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகளை நீக்க அறிவுறுத்திய நீதிமன்றம், பெண்கள், குழந்தைகள், முதியோர் கோயிலில் தங்குவதற்கு தடையில்லை என்று கூறியுள்ளது. பஜனைகள் பாடுவதும், சரண கோஷம் எழுப்புவதும் பக்தர்களின் உரிமை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவை சுமுகமான முறையில் அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ளது.

 

Exit mobile version