பஞ்சாப் முன்னாள் அமைச்சர் நவஜோத்சிங் சித்துவின் ராஜினாமாவை ஏற்பதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்கு பாஜக மற்றும் அவர், சார்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து எதிர்ப்பு குரல் வலுத்தது. சித்துவின் இந்த செயலுக்கு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் கண்டனம் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தநிலையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சித்துவின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த சித்து, சில தினங்களுக்கு முன் பஞ்சாப் மாநில அமைச்சர் பதவி விலகல் கடித நகலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது சித்துவின் ராஜினாமாவை ஏற்பதாக முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். சித்துவின் ராஜினாமாவை, ஆளுநர் விஜயேந்திர பால் சிங்கிற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.