வங்கிக் கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதங்களுக்கு சலுகை போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்பு வெளியீடு!!!

வங்கிக் கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதங்களுக்கு சலுகை போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மே 31 வரை நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். ஊரடங்கால் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். ரெப்போ வட்டி விகிதம் 4 புள்ளி 4 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார். இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்றும் தெரிவித்தார். வங்கிகள் தங்கள் கையில் இருக்கும் தொகையை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும்போது, அதற்கு வழங்கப்படும் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3 புள்ளி 35 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வங்கிகள் கடன் அளிக்க வேண்டும் என்றும், தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுறுத்தினார். தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 சதவிகிதம் குறைந்துள்ளதாக கூறிய அவர், தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதகவும் கூறினார். ஏற்றுமதி, இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதி பிரச்னையை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி உதவும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வட்டியில் கடன் வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான மாதத் தவணையை செலுத்துவதற்கான சலுகை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஏற்கெனவே மார்ச் முதல் ஏப்ரல் வரை சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த சலுகையானது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும், அடுத்த சில மாதங்களில் பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020 -21-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Exit mobile version