பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் உயர் வகுப்பினருக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது. முதல் முறையாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா, செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் நேற்று மசோதா மீதான விவாதம் நடந்தது.
நான்கரை ஆண்டுகளாக அக்கறை கொள்ளாமல், தற்போது இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவது தேர்தல் ஆதாயத்திற்காக என காங்கிரஸ் விமர்சித்தது. வேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியடைந்த பாஜக இடஒதுக்கீடு பற்றி பேசுகிறது என கடுமையாக சாடியது.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், இந்த மசோதாவால் தமிழகத்துக்கு பாதிப்பு என்று தெரிவித்தார். மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானமும் தோல்வியடைந்தது.
இதைத்தொடர்ந்து, நடந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் 165 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 7 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம், மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.