தேவையான அளவு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது- தமிழக அரசு

கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ள நிலையில், குஜராத் போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழக அரசின் அனுமதி பெறாமல், வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு, தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் பொது நல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து கையில் உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 31 ஆயிரம் ரெம்டெசிவர் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகள் தேவைப்பட்டால் 4 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான மருந்தை 783 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆயிரத்து 167 டன் ஆக்சிஜனை சேமித்து வைக்க முடியும் என்றும், ஒரு நாளைக்கு தமிழகத்தில் 400 டன் ஆக்சிஜனும், புதுச்சேரியில் 150 டன் ஆக்சிஜனும் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்றும் தற்போதைய நிலையில் 250 டன் ஆக்சிஜன் மட்டுமே தேவை உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும்,45 மெட்ரிக் டன் ஆக்சிஜன், ஆந்திரா தெலங்கானாவிற்கு அனுப்பப்பட்டதால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கமளித்துள்ள தமிழக அரசு, தேவையை விட அதிக அளவிலான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது என்றும், ஒருவேளை கொரோனா சூழல் மேலும் மோசமடைந்தாலும் அரசால் சமாளிக்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதே போன்று தமிழகத்தில் போதுமான அளவிற்கு வெண்டிலேட்டர்கள் உள்ளதாகவும், பற்றாக்குறை இல்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

Exit mobile version