70வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்தார். சென்னையில் 70வது குடியரசு தினம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்திலிருந்து விழா நடைபெறும் காமராஜர் சாலைக்கு காவலர்களின் புடைசூழ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். இதனையடுத்து தேசிய கொடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றிவைத்தார்.
குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் நடத்தப்பட்ட முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார். வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கத்தை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சூரியகுமார், தேனியை சேர்ந்த ரஞ்சித்குமார், தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் பெற்றனர். அவர்களுக்கு ஒரு லட்சத்திற்கான காசோலை மற்றும் விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான காந்தியடிகள் காவலர் பதக்கத்தினை முதலமைச்சர் வழங்கினார். கடலூரை சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேதரத்தினம், கிருஷ்ணகிரியை சேர்ந்த காவல் ஆய்வாளர் பிரகாஷ், அரியலூரை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், திருச்சியை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் திருக்குமார், நாமக்கல்லை சேர்ந்த தலைமை காவலர் கோபி ஆகியோர் இந்த விருதினை பெற்றனர். அவர்களுக்கு 40 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் விருது வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாகுபடி செய்த புதுக்கோட்டை மாவட்டம் வடவளத்தை சேர்ந்த சேவியர் என்ற விவசாயி, வேளாண்துறை விருதினை பெற்றார். அவருக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் விருதினை முதலமைச்சர் வழங்கினார்.
கொண்டாட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டன. தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை விளக்கும் இந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.