இந்தியாவும் இலங்கையும் தொடக்கக் காலத்தில் இருந்தே மிக நெருங்கிய பொருளாதார, அரசியல், கலாச்சாரத் தொடர்புகளுடன் விளங்கி வருவதாக இலங்கை அமைச்சர் சாகல ரத்னாயக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள இந்தியா சங்கத்தின் சார்பில் கொழும்பில் உள்ள விடுதியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் இலங்கைக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங், இலங்கை கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் துறை அமைச்சர் சாகல ரத்னாயக ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இலங்கை அமைச்சர், இலங்கையில் எரிசக்தி, வீடமைப்பு, விவசாயம், துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாடு, ரயில்வே ஆகிய வளர்ச்சித் திட்டங்கள் இந்தியாவால் செயல்படுத்தப்பட்டு வருவதைக் குறிப்பிட்டார். இயற்கைப் பேரிடர்க் காலத்திலும், தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொண்டபோதும் இந்தியா பக்கப்பலமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இலங்கைக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங், தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் இலங்கைக்கு வந்த முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி எனக் குறிப்பிட்டார். இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு இந்தியா பெரிதும் உதவி வருவதாகவும் தெரிவித்தார்.