செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டு இன்றுடன் 381 ஆண்டுகள் நிறைவு

இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்டும் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டு இன்றுடன் 381 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மொகலாய அரசர் ஷாஜகானால் கட்டப்பட்டு, சுதந்திர தினத்தில் பிரதமரால் தேசியக் கொடி ஏற்றப்படும் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தின் கதையை பார்க்கலாம்…

1638ஆம் ஆண்டு 245 ஏக்கர் பரப்பில் ஒரு மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார் முகலாயப் பேரரசர் ஷாஜகான். 10 ஆண்டுகால உழைப்பின் பின்னர் 1648ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இதனை ‘ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை’ – எனும் பொருளுடைய ‘குயிலா-இ-முபாரக்’ – என்ற அரபுச் சொல்லால் முகலாயர்கள் குறிப்பிட்டனர். பின்னர் அதன் நிறத்தால் செங்கோட்டை என்ற பெயரே வரலாற்றில் நிலைத்துவிட்டது. செங்கோட்டையில் மொத்தம் 16 கட்டிடங்கள் உள்ளன. மொகலாய பாணியிலான நுழைவாயில்கள், அரண்மனைகள், அரங்கங்கள், விதான மண்டபங்கள், தோட்டங்கள், கடை வீதிகள் ஆகியவற்றை செங்கோட்டை தன்னுள் கொண்டுள்ளது. 1857ஆம் ஆண்டில் முதல் சுதந்திரப் போரில் ஈடுபட்ட வீரர்கள், இங்கு இருந்துதான் ஆங்கில அரசுக்கு எதிராகப் புரட்சியை வழி நடத்தினர். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் ஆங்கிலேயர்களின் கொடி கீழிறக்கப்பட்டு இந்தியாவின் தேசிய கொடியை ஏற்றிய ஜவகர்லால் நேரு, இந்தியாவின் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.

Exit mobile version