ரயில்வே அதிகாரிகள் இடையிலான அலுவல் சார்ந்த உரையாடல்களை தமிழில் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கையை மாற்றி, புரியும் மொழியில் பேசலாம் என தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
தென்னக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ரயில் நிலைய மேலாளர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலேயே பேசி தகவல்களை பரிமாற வேண்டும் என்றும், தமிழில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் இன்று காலையில் தென்னக ரயில்வே சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. தமிழகத்தில் பணியாற்றும் சில வட இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு தமிழ் புரியவில்லை என்ற காரணத்தால் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சுற்றறிக்கைக்கு தமிழகம் முழுவதிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தெற்கு ரயில்வேயில் அலுவல் சார்ந்த உரையாடல்களில், பழைய நடைமுறையே தொடரும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். அலுவல் சார்ந்த உரையாடல்கள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.