கர்நாடக, கேரள மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கான நீர்வரத்தும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 87 ஆயிரம் கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 35 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் இரு அணைகளிலும் இருந்து மொத்தமாகக் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 32 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில் இரு அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டும்போது நீர்வரத்து அப்படியே முழுமையாகக் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் வாய்ப்புள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் காவிரியாற்றில் நீர்வரத்தும் குறைந்துள்ளது. நேற்றிரவு நொடிக்கு 3 இலட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 2 இலட்சத்து 85 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. வெள்ளம் கரைபுரண்டு பாய்வதால், அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசலில் செல்லவும் விதிக்கப்பட்ட தடை ஆறாவது நாளாக நீடிக்கிறது.