கொரோனா உயிரிழப்புக்குக் காரணமான மூச்சுத்திணறல் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும், பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற கருவி தேவையான அளவு இருக்கிறது என்றும், அதன்மூலம் கொரோனா மரணங்களை கணிசமாகத் தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடுமையான மூச்சுத் திணறல்… சுய நினைவு பறிபோகும் நிலை… இவையெல்லாம், கொரோனா முற்றும்போது ஏற்படும் அறிகுறிகள். ஒருவர் மரணத்தின் அருகில் சென்றுவிட்டார் என்பதை உணர்த்தும் பயங்கர அறிகுறிகள். இந்த அறிகுறிகளுக்குப் பிறகே, கொரோனா மரணங்கள் நிகழ்கின்றன. கொரோனா பாதிப்புள்ளவர்கள், மூச்சுத் திணறல் ஏற்படும்போது, அதை சாதரணமாக எடுத்துக் கொண்டு, கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர்.
அதன்பிறகே, கொரோனா வைரஸ், நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை குறைத்து, சுவாசப் பாதையில் சிக்கலை ஏற்படுத்தி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, தீவிர மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைக்கு வருபவர்களே, பெரும்பாலும் மரணம் அடைந்துள்ளனர் அதனால், மூச்சுத்திணறலின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று, தகுந்த சிகிச்சையை மேற்கொண்டு உயிரைக் காத்துக் கொள்ள முடியும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அறிகுறியை ஆரம்பத்திலேயே கண்டறியும், அதிமுக்கியக் கருவி பல்ஸ் ஆக்சிமீட்டர். இந்தக் கருவி, உடலுக்குள் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிய உதவுகிறது. திசுக்களில் செல்லும், ஆக்சிஜன் அளவு குறைவதால் ஏற்படும், சைலன்ட் ஹைபோக்சியா கட்டத்தை நோயாளி அடைவதைக் கண்டறிய, பல்ஸ் ஆக்சிமீட்டர் உதவுகிறது. உள்ளங் கைக்குள் அடங்கிவிடக் கூடிய, இந்தக் கருவியை மோதிர விரல் அல்லது சுட்டு விரலில் மாட்டினால் போதும். அது உடலுக்குள் செல்லும் ஆக்சிஜன் அளவினை காட்டிவிடுகிறது.
ஒருவரது உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு 95 சதவிகிதத்துக்கும் கீழ் குறையும்போது, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அவரை, அப்போதே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை இந்தக் கருவி உணர்த்துகிறது என்கின்றனர் மருத்துவத் துறையினர்.
அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கும் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆக்ஸி மீட்டரை வழங்க முடிவெடுத்து, 20 ஆயிரத்திற்கும் மேலான கருவிகளை தமிழக அரசு வாங்கி உள்ளது. அரசு மருத்துவமனை ஒவ்வொன்றுக்கும் தலா ஆயிரம் கருவிகளும், கொரோனா தடுப்பு மையம் ஒன்றுக்கு தலா 750 கருவிகளும் வழங்கப்பட உள்ளது. ஆயிரத்து 900 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் இந்தக் கருவி கிடைக்கிறது. தமிழக அரசு மருத்துவமனைகளில் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை நோயாளியை பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி மூலம் மருத்துவர்கள் பரிசோதிக்கின்றனர். இதன் மூலம் உயிரிழப்பு என்ற ஆபத்தான கட்டத்தை நோயாளிகள் எட்டிவிடாமல் காக்கப்படுகின்றனர் என்கின்றனர் மருத்துவத்துறையினர்.