”எனது முதலமைச்சர் நாற்காலியின் மூன்று கால்கள் எவற்றால் ஆனவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களால் ஆனது” என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் புகழப்பட்டவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தில், 1930-ம் ஆண்டு ஏப்ரல் 13-ல் பிறந்தார் கல்யாணசுந்தரம். இவருடைய தந்தை அருணாச்சலமும் கவிபாடும் திறன்பெற்றவர். கல்யாணசுந்தரம், இரண்டாம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்குப் போகவில்லை. அண்ணனிடமே அடிப்படைக் கல்விகளைக் கற்றுக்கொண்டார்.
இவர், சினிமாவில் தனது முதல் பாடலை ‘படித்த பெண்’ என்னும் தமிழ்ப் படத்துக்காக 1956-ல் எழுதினார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அதே ஆண்டில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற ‘பாசவலை’ திரைப்படத்தில், இவர் எழுதிய பாடல், அவரை பிரபலப்படுத்தியது. அன்றைய தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக எம்.ஜி.ஆர், சிவாஜி இருந்தபோதிலும், தன்னுடைய தத்துவப் பாடல்களால் மக்கள் மனதில் தனித்து தெரிந்தவர் பட்டுக்கோட்டையார்.
சினிமாவில் இவர் எழுதிய ‘திருடாதே, பாப்பா திருடாதே!””‘‘தூங்காதே தம்பி தூங்காதே…’’‘‘சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா” போன்ற பாடல்கள், குழந்தைகள் மனதில் நேர்மையை விதைக்கவும், அவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தவும், தேவையற்ற பயங்களை துரத்தி, நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடல்கள்.
”கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல” என்பதுதான், லட்சங்களில் சம்பளம் வாங்கும் இந்தக் காலத்திலும் இருக்கும் நிலை. ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்பும் இதே நிலைதான் என்பதை இந்த பாடல் மூலம் நமக்குப் புரிய வைத்தார் பட்டுக்கோட்டையார். விவசாயிகளின் அவல நிலையை, எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தில் வரும், காடுவௌஞ்சென்ன மச்சான், நமக்குக் கையும் காலும்தானே மிச்சம் என்ற பாடல் மூலம், மிக அழகாக விளக்கி இருந்தார் பட்டுக்கோட்டையார்.
கல்யாணசுந்தரம் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும், துணிச்சல் மிக்கவராக இருந்தார். திரைப்பட நிறுவனம் ஒன்றுக்கு அவர் பாட்டு எழுதிக்கொடுத்தார். ஆனால், பணம் கைக்கு வந்து சேரவில்லை. பணத்தைப் பெறுவதற்காக, பட அதிபரிடம் நேரில் சென்று கேட்டிருக்கிறார். ‘‘பணம் இன்று இல்லை…நாளைக்கு வந்து பாருங்கள்’’ என்று பட அதிபர் பதில் சொல்ல… உடனே கல்யாணசுந்தரம்,சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவற்றில் இருந்த வரிகள் இவைதான்… ‘தாயால் வளர்ந்தேன்…தமிழால் அறிவு பெற்றேன்… நாயே – நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்…
நீ யார் என்னை நில் என்று சொல்ல?…
இதை பார்த்த உடன், பட அதிபரிடம் இருந்து பணம் வந்து சேர்ந்தது.
கல்யாணசுந்தரத்தின் மனைவி பெயர் கௌரவாம்பாள். 1959-ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண்டிலேயேதான், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திடீரென மரணமடைந்தார்…
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைகல்யாண சுந்தரத்தின் பாடல்களில் இருக்கும் வரிகள், வெறும் காசுக்காகப் படைக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு மனிதனின் இயல்பான வாழ்க்கையிலிருந்தே எடுக்கப்பட்டவைதாம். அதனால்தான், காலங்கள் பல கடந்தாலும், இன்றும் மக்கள் மனதில் வாழ்கின்றார் படுக்கோட்டையார்…