ரயில்வேயில் தகவல் பரிமாற்றம் தமிழில் பயன்படுத்துவற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

கட்டுப்பாட்டு அறை மற்றும் நிலைய அதிகாரிகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்தில் தமிழை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிரெதிரே வந்தன. அப்போது ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தவறுக்கு மொழிப் பிரச்சினையால் வந்த தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என தெரியவந்தது. இதையடுத்து அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டு அலவலர்கள் மற்றும் நிலைய அதிகாரிகளுக்கு கடந்த 12ம் தேதி அவசர சுற்றறிக்கை ஒன்றை சென்னை கோட்டத்தை சேர்ந்த முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் சிவா அனுப்பினார்.

அதில் கட்டுப்பாட்டு அறைக்கும் நிலைய அதிகாரிகளுக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு தமிழக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்த சுற்றறிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Exit mobile version