விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலைகள் பல வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வரும் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலைகள் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பல்வேறு வண்ணங்களைத் தீட்டி அழகுபடுத்தும் பணியில் சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பணிகள் நிறைவடைந்த சிலைகள் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. களிமண்ணால் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாலும், நச்சுப் பொருட்கள் இல்லாத இயற்கைச் சாயம் பயன்படுத்துவதாலும் இந்தச் சிலைகள் சுற்றுச்சூழலுக்குத் தீங்கில்லாதவை எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஐந்நூறு ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை சிலைகள் விற்கப்படுவதாகவும் ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கு ஏற்றபடி சிலைகளை வாங்கிச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.