தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை அழிக்க ஆயத்தமாகும் திமுக அரசு!

“திராவிட மாடல் என்பது சமூகநீதி மட்டுமின்றி, சுற்றுச்சூழல் நீதியையும் உள்ளடக்கியது” இது சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை (2022) உச்சி மாநாட்டின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட வாக்கியமாகும். இப்படிப்பட்ட வார்த்தையைப் பேசிவிட்டு அதற்கு எதிராகவே இந்த திமுக அரசு செயல்படுவது நகை முரணாகும். குறிப்பாக மீனவ மக்களுக்கும் கடலில் வாழும் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்டு திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க உள்ளார்கள். இது எவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டினை நிகழ்த்தும் என்று தெரியாமல் அரசு இயந்திரம் செயல்படுகிறது என சூழலியல் அறிஞர்கள் தங்களுடைய வாதத்தினை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதனைத் தவிர திமுக தனது தேர்தல் அறிக்கையில் பக்கிங்ஹாம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அசுத்தம் நிறைந்த கால்வாய்களை சரிசெய்து சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவோம் என்று குறிப்பிடப்பிட்டிருந்தது. அதனை செம்மைப்படுத்துவதற்கான எவ்வித முகாந்திரத்தினையும் திமுக முன்னெடுக்கவில்லை என்பதே நிதர்சனம். மேலும் பக்கிங்ஹாம் கால்வாயினை ஒட்டி குடியிருக்கக்கூடிய பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் மட்டும் ஆயத்தமாக ஈடுபட்டு வருகிறது.

பரந்தூர் விமான நிலையத்தை எடுத்துக்கொண்டால், பரந்தூர் விமானநிலையத் திட்டத்துக்குச் சுமார் 4,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.  இத்தனை ஏக்கர் நிலத்தினைச் சுற்றி 13 ஏரிகள், வரத்து வாய்க்கால்கள், ஆறுகள் உள்ளன. பல்வேறு துறைகளுக்குச் சொந்தமான நிலங்களும், மக்களுக்கு, விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களும் உள்ளன. புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தின்(2023) மூலம் இந்நிலங்களைக் கையகப்படுத்தினால் ஏற்கெனவே உள்ள சட்டரீதியான தடைகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும்.

திமுகவின் புதிய நில ஒருங்கிணைப்புச் சட்டம் சொல்வது என்ன? 

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழக சட்டசபையின் இறுதிக் கூட்டமானது நடைபெற்றது. அக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாக்களில் ஒன்றுதான் நில ஒருங்கிணைப்புச் சட்டம் (2023) ஆகும். இந்தச் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கனவே நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒன்றுதான். பிறகு தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், திமுக ஆட்சியில் தொழில்துறை நோக்கங்களுக்காக 1997ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் பல நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகள், பொதுமக்கள் என்று பலர் நிலத்தினை இழந்தனர்.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் படி, 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும். மேலும் நீர்நிலைகளை பாதுகாப்பது இச்சட்டத்தின் நோக்கமாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கால்வாய்கள், வரப்புகள், சிற்றோடைகள் போன்றவற்றினை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் இச்சட்டத்தில் சொல்லப்படவில்லை. நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று வைத்துக்கொண்டாலும், நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று வைத்துக்கொண்டாலும் தொழிற்சாலை வளாகம், வணிக வளாகம், பல்கலைக்கழகங்களுக்குள் உள்ள அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளை மக்கள் பயன்படுத்த முடியுமா? பொதுச்சொத்தாகவும் மக்களின் பயன்பாட்டிலும் இருந்துவந்த நீர்நிலைகள் தனியாருக்குச் சொந்தமான குளங்கள், ஏரிகளாக மாறிவிடும். விவசாயிகளுக்கு நீர்நிலைகள் மீதுள்ள உரிமைகள் பறிபோகும்; விவசாயம் பாதிக்கப்படும்.

திமுக அரசு, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும், அச்சூழலில் வாழும் உயிரினங்களுக்கும் பேராபத்தினை நிகழ்த்த உள்ளது என்பதே உண்மை.

 

Exit mobile version