தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவிற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது .
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி சேகர், தனக்கு உதவியாக இயக்குனர் பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர் அடங்கிய குழுவை நியமித்திருந்தார். இந்த குழுவுக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. தனி அதிகாரி சேகர் நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால், தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்காலிக குழுவை நியமிக்க தனி அதிகாரிக்கு அதிகாரமில்லை என கதிரேசன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலுரையாக, தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் இக்குழு தலையிடாது என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத்தரப்பை ஏற்றுகொண்ட உயர் நீதிமன்றம், தற்காலிக குழு நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது. வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.