இருக்கின்ற பிரச்னைகள் போதாதென்று மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கிறது கர்நாடகா. மேகேதாட்டுவில் கட்டப்படும் அணையால் தமிழக வேளாண்மை எதிர்கொள்ள நேரிடும் இன்னல்கள் என்னவென்று சுருக்கமாகப் பார்ப்போம்..
கர்நாடகம் என்றும் தமிழகம் என்றும் காவிரிக்கு தெரியாது. ஊற்றாக உருவெடுத்து, ஆறாக வடிவெடுத்து, மண்ணை வளம்கொழிக்கச் செய்து கடலில் கலக்கிறாள் காவிரி. ஆனால், கர்நாடக அரசு தான் அணைகள் என்றும் மதகுகள் என்றும் மதம்பிடித்து திரிகின்றது. இருக்கின்ற அணைகள் போதாதென்று மேகதாட்டுவில் புதிய அணை ஒன்றை கட்ட முயற்சிக்கிறது கர்நாடகா. முதலில் இருக்கின்ற அணைகளின் கொள்ளளவை தெரிந்து கொள்வோம்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கபினி அணையின் கொள்ளளவு 15 புள்ளி 67 டி.எம்.சி. ஆகும். ஹேரங்கியில் 8 புள்ளி 07 டிஎம்சியும், ஹேமாவதியில் 35 புள்ளி 76 டிஎம்சி தண்ணீரும் தேக்கப்படுகிறது. இதன் உபரிநீர் கே.ஆர்.எஸ். அணையில் சேமிக்கப்படுகிறது. அதன் கொள்ளளவு 45 புள்ளி 05 டி.எம்.சி. ஆகும். மொத்தமுள்ள 4 அணைகளின் மூலம் கர்நாடகா 104 புள்ளி 55 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்கிறது. கர்நாடகாவின் உபரி நீர் மட்டுமே தமிழகத்தின் உயிர்நீராக வந்து சேர்கிறது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் 192 டி.எம்.சி-யாக இருந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி அதில் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் அதனை 177 புள்ளி 25 டி.எம்.சி.யாக குறைத்து உத்தரவிட்டது.
90 ஆண்டுகளுக்கு முன்பு 4 லட்சம் ஹெக்டேராக இருந்த கர்நாடகாவின் பாசனப்பரப்பு தற்போது 21 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. அதேசமயம், 25 லட்சம் ஹெக்டேராக இருந்த தமிழகத்தின் பாசனபரப்பு தண்ணீர் வரத்து குறைவால் 16 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் ஒகேனக்கல்லுக்கு 15 கிலோ மீட்டர் முன்பாக கனகபுரா அடுத்த மேகேதாட்டு என்னுமிடத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய அணை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளது கர்நாடகா. 4500 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படும் இந்த அணையில் 50 டி.எம்.சி தண்ணீர் தேக்கப்படவுள்ளது. அணையின் நீர்மின் நிலையம் மூலம் 120 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே 104 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளும் கர்நாடகா மேகேதாட்டு அணையை கட்டிவிட்டால் 154 டி.எம்.சி நீரை தன்னகத்தே வைத்துக் கொள்ளும். அப்படி பார்த்தால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து திறக்கப்பட வேண்டிய 177 டி.எம்.சி தண்ணீருக்கும் சிக்கல் வந்து சேரும்.
மேகேதாட்டு என்னும் அபாயம் அணையாக உருவெடுத்து விட்டால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை தரிசாக மாறும் சூழல் ஏற்படும். காவிரி நதிநீரில் எப்படி சட்டரீதியான போராட்டங்களால் வெற்றி பெற்றோமோ, அத்தகைய ஒரு சட்டப் போராட்டத்தை எடுக்க வேண்டிய நேரமிது.
கர்நாடக அணைகளின் கொள்ளளவு
கபினி அணை – 15.67 டி.எம்.சி.
ஹேரங்கி – 8.07 டிஎம்சி
ஹேமாவதி – 35.76 டிஎம்சி
கே.ஆர்.எஸ். – 45.05 டி.எம்.சி
மொத்த கொள்ளளவு – 104.55 டி.எம்.சி.
காவிரியில் கிடைக்கும் நீர்
காவிரி நடுவர்மன்றம் – 192 டிஎம்சி
உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு – 177.25 டி.எம்.சி
பாசன பரப்பளவு முன்பு தற்போது
கர்நாடகா 4 லட்சம் ஹெக்டேர் 21 லட்சம் ஹெக்டேர்
தமிழகம் 25 லட்சம் ஹெக்டேர் 16 லட்சம் ஹெக்டேர்
மேகேதாட்டு அணை?
செலவு – ரூ. 6000 கோடி
பரப்பு – 4500 ஏக்கர்
கொள்ளளவு – 50 டிஎம்சி
மின்உற்பத்தி – 120 மெகாவாட்