ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டுகள் என, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அச்சம், பதட்டமின்றி தேர்வு எழுதுவதற்கு, ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். டெல்லி தல்கோத்ரா விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுத்தேர்வு எழுதும் ஆயிரத்து 50 மாணவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், பிரதமர் மோடியின் உரையாடல் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமே அனைத்துமாக இருந்துவிடக் கூடாது என மாணவர்களிடம் தெரிவித்தார். இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தை நினைவுக்கூர்ந்த பிரதமர், சந்திரயான் 2 தோல்வி அடைந்தாலும், கவலைப்படாதீர்கள் என்று விஞ்ஞானிகளை தட்டிக் கொடுத்துவிட்டு வந்ததை குறிப்பிட்டார். ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், மதிப்பெண்ணை நினைத்து மன அழுத்ததில் மாணவர்கள் ஆழ்ந்து விடக்கூடாது என்றும் கூறினார்.