சமையலுக்குப் பயன்படும் பூண்டு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏற்படும் அபாயம். அன்றாடச் சமையலுக்கு சுவை சேர்ப்பதற்கும், உண்ட உணவு செரிப்பதற்கும் பெரும் பங்களிப்பது பூண்டாகும். தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து தான் பூண்டு கொண்டுவரப்படுகிறது. கடந்த சில நாட்களாக அங்குப் பெய்துவரும் தொடர் மழையால் பூண்டு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, அதிகப்பட்சமாக 7 மடங்கு வரை விலை உயர்ந்திருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் பூண்டுக்கு போதிய விலை கிடைக்காததால், இந்த முறை பூண்டு விவசாயம் பாதியாகக் குறைந்துவிட்டதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். விலை அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல் அடுத்த நான்கு மாதங்களில் பூண்டு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறுகின்றனர் வணிகர்கள்.
நவராத்திரி, தீபாவளி எனத் தொடர்ந்து விழாக்கள் வரவுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் தற்காலிகத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, மத்தியப் பிரதேச மொத்த வியபாரிகள், பூண்டைப் பதுக்கத் தொடங்கிவிட்டதாக வணிகர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தை உரிக்கும்போது தான் கண்ணில் நீர் வடியும். ஆனால் பூண்டின் விலையைக் கேட்டாலே நீர் வடியும் அளவுக்கு விலை உயர்ந்துவிட்டதாகக் கூறுகின்றனர் வணிகர்கள்.