முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ஜெட்லி சிறந்த வழக்கறிஞராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் திகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சியில் அருண் ஜெட்லி முக்கிய பங்கு வகித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ள இரங்கலில், அருண் ஜெட்லி அரசியல் ஜாம்பவனாக திகழ்ந்ததாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணி இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார். ஜெட்லியின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசியதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், அவர்களிடம் தன் இரங்கலை தெரிவித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் மூத்த தலைவரான அருண் ஜெட்லி தன்னுடைய குடும்ப நண்பராக திகழ்ந்ததாகவும் அவருடைய மறைவு தனிப்பட்ட முறையில் அதிக வலியை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.