முதற்கட்ட தேர்தல் நடைபெறும் ஆந்திரா, ஒடிசா, அஸ்ஸாம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தக்கல் இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆந்திரா, ஒடிசா, அஸ்ஸாம், உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், மாகாராஷ்டிரா உள்ளிட்ட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முதற்கட்டமாக வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 26 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் 28 ஆம் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறை நாள் தவிர்த்து மற்ற அனைத்து வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.