அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கியதை போல், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்க 2 ஆயிரத்து 363 கோடியே 13 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி உயர கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.