பொள்ளாச்சி வழக்கு எப்போது சிபிஐக்கு மாற்றப்படும்-உயர்நீதிமன்றம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் நடைமுறைகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வரும் 30ம் தேதி நேரில் ஆஜராக சிபிசிஐடி அனுப்பிய சம்மனை எதிர்த்து நக்கீரன் கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் நக்கீரன் தரப்பு உறுதி அளித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு எப்போது ஒப்படைக்கப்படும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும், அதுவரை சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஏப்ரல் 1ம் தேதி சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version