மேலூரில் சினிமா பாணியில் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் வாகனம் விபத்து ஆனதுபோல் நடித்து மர்ம கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில், சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு தரையில் படுத்து கிடந்த இளைஞரை லாரி ஓட்டுனர் முகம்மது ஃபரீத் விபத்து நடந்து இருப்பதாக எண்ணி வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்று அவரை காப்பாற்ற முயன்றதாக தெரிகிறது.
தரையில் படுத்திருந்த இளைஞர் திடீரென எழுந்து லாரி ஓட்டுநரை மடக்கிப் பிடிக்க, அருகில் மறைந்திருந்த 5 பேர் லாரி ஓட்டுநரை பிடித்து கட்டி வைத்தனர். அவரை மிரட்டி அவரிடமிருந்த ரூபாய் 12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். சினிமா பாணியை போன்று நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். 3 பேரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவான மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.