ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடித்த விவகாரம் -செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம்

சேலம் விரைவு ரயிலில் கொள்ளையடித்த 5 கோடியே 78 லட்ச ரூபாய் பணத்தை செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட ரயில் பெட்டியில், 342 கோடி கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் 169 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் கொள்ளையர்கள் துளையிட்டு 5 கோடியே 78 லட்சத்தை கொள்ளையடித்தனர்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை செய்து வடமாநிலத்தைச் சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். சைதாப்பேட்டை 11 ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே, கொள்ளையடித்த பணத்தை பங்கு போட்டு செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version