ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரியும் ஆலையை பராமரிக்க ஆய்வுக்குழு அமைக்க கோரியும் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நிதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நீண்ட நாட்களாக மூடியிருப்பதால், ஏதாவது அசம்பாவிதம் எற்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே, தற்காலிகமாக ஆலையை பராமரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலை முழுக்க முழுக்க தற்போது அரசு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், ஆலையை மாவட்ட உதவி ஆட்சியர் தலைமையிலான குழு கண்காணித்து வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள் சத்ய நாராயணன், நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் கோரிக்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. ஆலையை மூடிய பின்பு தூத்துக்குடியில் காற்று மாசுபாடு பெருமளவு குறைந்துள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் – 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.