கர்நாடக மாநிலம் கல்புர்கியில் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று சிறை சென்ற நபர் ஒருவர் எம்பிபிஎஸ் முடித்து மருத்துவராகியுள்ளார்.
அஃப்சல்புர் தாலுகாவில் உள்ள போசாகா கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் துகாராம் பட்டீல் பெங்களூருவில் 1997ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். இரண்டாம் படித்துக் கொண்டிருந்த போது நடைபெற்ற ஒரு பிரச்சனையில் அசோக் என்பவரைக் கொலை செய்து விட்டு சிறை சென்றார். இந்த குற்றத்துக்கு 2002ம் ஆண்டு சுபாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பரப்பன அக்ரஹாரா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்
சிறையில் இருந்தபோது, சிறைத் துறை மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உதவி செய்யும் பணியை மேற்கொண்டு வந்த சுபாஷ், சிறையில் இருக்கும் கைதிகளில் காசநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை நோயில் இருந்து மீட்க உதவினார். இதற்காக சிறை நிர்வாகம் சுபாஷுக்கு பாராட்டு தெரிவித்திருந்தது
சிறையில் இருந்த போதே, சுபாஷ் எம்ஏ ஜர்னலிசமும் படித்து முடிந்தார். சிறையில் இருக்கும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளுதல், புத்தகங்கள் படிப்பதையே பெரும்பாலும் செய்து கொண்டிருந்ததாகவும், கிளினிக் ஒன்றைத் தொடங்கி, சிறையில் இருப்பவர்களின் உறவினர்களுக்கும், ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கும் இலவச சிகிச்சை அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்
மருத்துவராக வேண்டும் என்பது சிறு வயது முதலே எனக்கு கனவாக இருந்தது. 1997ம் ஆண்டு நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் துவங்கினேன். 2002ம் ஆண்டு எதிர்பாராத விதமாக ஒரு கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றேன். சிறையிலிருந்தவாறே இதழியல் படிக்கத் துவங்கிய நான் அதில் முதுகலை பட்டம் பெற்றேன். சிறையில் மருத்துவர்களுக்கு என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்தேன். நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்ட நான் மீண்டும் மருத்துவம் படிக்க அனுமதி கேட்டபோது ராஜிவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்க இடம் கிடைத்தது. இன்று நான் மீண்டும் மருத்துவராக தகுதி பெற்றுள்ளேன். இனி வரும்காலத்தில் சமுதாயத்திற்கு என்னால் ஆன உதவிகளை செய்ய விரும்புகிறேன் என்றார்.
14 வருடங்கள் சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்த சுபாஷ் மீண்டும் மருத்துவம் படிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த போது இது மிகவும் கடினமான காரியம் எனத் தெரிவித்ததாகவும் ஆனால் தன்னுடைய கடின முயற்சியால் அவர் இன்று வெற்றிகரமாக படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள்…
14 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டு கடந்த 2016ம் ஆண்டு வெளியே வந்த சுபாஷ், ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து எம்பிபிஎஸ் படிக்க அனுமதி பெற்றார். மூன்றாம் ஆண்டிலிருந்து மீண்டும் படிப்பை தொடங்கிய அவர் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எம்பிபிஎஸ் படித்து முடித்தார். அதன்பிறகு, ஒரு வருடம் பயிற்சியை இன்று நிறைவு செய்தார். சிறை தனக்கு வாழ்க்கையை பற்றிய பாடங்களை கற்றுத் தந்ததாக தெரிவிக்கிறார் சுபாஷ் – ஆசிரியர் வாய்ஸ்
இன்று பயிற்சி முடித்த அவருக்கு சக மருத்துவர்களும் ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்வின் பெரும்பகுதியை சிறையில் கழித்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து மருத்துவராகியுள்ள சுபாஷின் தன்னம்பிக்கை வியப்புக்குரியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை