மக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி – முதலமைச்சர்

மக்கள் தான் முதலமைச்சர், மக்கள் உத்தரவிடுவதை நிறைவேற்றுவதே தனது பணி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம், கண்ணனூர் மண்ணச்சநல்லூர், லால்குடி புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். மண்ணச்சநல்லூரில் கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில், திறந்த வாகனத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதை தடுக்க திமுக முயற்சி செய்ததாக குற்றம்சாட்டினார். ஏழை, எளிய மக்கள் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட பரிசு கொடுப்பது தவறா என கேள்வி எழுப்பிய முதலமைச்சர், அதிமுக அரசு, கொடுக்கும் அரசு எனவும், அதை தடுப்பதற்கு முயற்சி செய்த கட்சி திமுக எனவும் விமர்சித்தார்.

இதனைத்தொடர்ந்து, லால்குடி பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் எங்கு சென்றாலும், அதிமுக அரசு குறித்து பொய் குற்றச்சாட்டுக்களை வைப்பதாக அவர் கூறினார். அதிமுக ஆட்சியை பற்றி தவறாக பிரசாரம் செய்யும் ஸ்டாலினுக்கு பதில் தரும் விதமாக, தமிழக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களை பட்டியலிட்டு, முதலமைச்சர் பேசினார். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் வர வேண்டும் என்பதற்காக, இரவு பகலாக அதிமுக அரசு உழைப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பின்னர், புள்ளம்பாடி பகுதியில் பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாழை மர நாரில் இருந்து துணி உற்பத்தி செய்வதிலும், மருந்து தயாரிப்பதிலும் அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வருவாய் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இதற்கான பிரம்மாண்டமான தொழிற்சாலை திருச்சியில் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version