மீண்டும் பூதாகரமாகும் பெகாசஸ் மென்பொருள் விவகாரம்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு, இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் அமைத்த குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியாகி அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகின் அதிசக்திவாய்ந்த சைபர் ஆயுத போர் என்ற தலைப்பில் வெளியான அந்த கட்டுரையில், 2017ம் ஆண்டு பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது, அவரும், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவும் கடற்கரையில் வெறும் கால்களில் நடந்தனர் என்றும், அந்த உணர்வுகளுக்குக் காரணம் இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

2 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர்புடைய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இந்த விவகாரம் இந்தியாவில் மீண்டும் பெரிதாக வெடித்துள்ளது.

பெகாசஸ் விவகாரம் தொடர்பான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என சாடியுள்ளார்.

Exit mobile version