எளிமையின் சிகரமாக விளங்கிய அறிஞர் அண்ணா நினைவுநாள் இன்று

கருத்தில் வலிமை, தோற்றத்தில் எளிமை என்பதுதான் அண்ணாவின் வரையறை. “மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் மணம் உண்டு” – என்று சொல்லி, எதிர் அணியில் இருப்பவர்களையும் போற்றும் அரசியல் நாகரிகத்தை விதைத்தவர் அறிஞர் அண்ணா. அரசியல் நாகரிகத்தின் சிகரமாக விளங்கியவர் அண்ணா.

எந்த பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்து வந்தாரோ, எந்தப் பெரியார் தேர்தலில் அண்ணாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தாரோ, அந்தப் பெரியாரிடம்தான் முதல்வராகப் பதவி ஏற்ற பின் அண்ணா முதன்முறையாக ஆசிகளைப் பெற்றார். அதுபோலவே, எந்தக் காமராசரை எதிர்த்து வென்றாரோ அவரிடமும் நேரில் சென்று வாழ்த்துப் பெற்றார்.

1967ல் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, திமுக 137 இடங்களில் வென்று மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருந்தது. அப்போது, ’திமுகவின் வெற்றியைக் கொண்டாடலாமா?. காமராசர் சொந்தத் தொகுதியிலேயே தோற்றிருக்கிறார் அதை போஸ்டர் அடிக்கலாமா?’ என்று கட்சியினர் கேட்ட போது, “காமராஜரின் தோல்வியை கொண்டாடாதீர்கள். அது கொண்டாட கூடியதல்ல. காமராஜர் போன்ற தலைவர் தமிழ்நாட்டிற்கு கிடைக்க இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதனால் நமது வெற்றிக் கொண்டாட்டங்களைத் தள்ளிப் போடுங்கள்” என்று சொன்னவர் அண்ணா. முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்திடம், ‘நல்லாட்சி நடத்த யோசனைகள் இருந்தால் கூறுங்கள்’ என்று பெரிய மனதோடு கேட்டவர் அண்ணா.

தன்னிடம் இருந்து ஈ.வெ.கி. சம்பத் பிரிந்து சென்றபோது, ‘காது புண்ணானதால் தோட்டைக் கழட்டி வைத்திருக்கிறோம். மீண்டும் அணிவோம்’ என்று பரிவோடு சொன்னார் அண்ணா. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்திற்கு அண்ணா சென்றபோது, ‘தமிழகத்தில் காங்கிரஸ் ஏன் தோல்வி அடைந்தது?’ – என்று கேட்கப்பட்டது. அப்போது, ‘நீண்ட நாட்கள் பதவியில் இருந்ததால்…என்று பதில் சொன்னார் அண்ணா. அங்கே அவர் காங்கிரசைக் குறை சொல்ல விரும்பவில்லை.

அண்ணா அவர்கள் முதல்வராகப் பதவி ஏற்றபோது, அவரது மனைவியைத் தவிர, உறவினர்கள் வேறு யாருக்கும் பதவி ஏற்பு விழாவுக்கான சிறப்பு நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படவில்லை. அவர்கள் வெளியே மக்களோடு நின்றுதான் விழாவில் பங்கெடுத்தனர். உறவினர்களுக்கு அவர் பதவியையோ, சிபாரிசையோ ஒருபோதும் வழங்கியதும் இல்லை.

1967ல் அறிஞர் அண்ணா தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற பின்னர், அவரது இல்லத்திற்கு சோபாக்கள், நாற்காலிகள் கொண்டுவரப்பட்டன. ’அவற்றை மாடியில் வைக்கலாமா?’ – என்று கேட்ட ஊழியர்களிடம், ‘கீழேயே வைத்துவிடுங்கள், நாளை பதவி போனால் எடுத்துச் செல்ல எளிதாக இருக்கும்!’ என்றார் அண்ணா. அவருக்குப் பதவி ஆசை துளியும் இருந்தது இல்லை.

அண்ணா அவர்கள் தலைசீவியதையோ, கண்ணாடி பார்த்ததையோ யாரும் பார்த்ததே இல்லை. 1967ஆம் ஆண்டின் தேர்தல் பிரசாரத்தின் போது, அரசு மாளிகையில் இடம் இல்லை என்று சொல்லப்பட்டதால் தனது காரிலேயே தூங்கியவர் அண்ணா. 1968ல் தமிழக முதல்வராக இருந்தபோது தோள் பகுதியில் கிழிந்திருந்த சட்டையைத் துண்டால் போர்த்தியபடி பயன்படுத்தியவர் அண்ணா.

இப்படி எளிமையின் சிகரமாக விளங்கிய அண்ணாவை அவரது நினைவுநாளில் நினைவுக் கூர்வோம்.

Exit mobile version