ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம். 2018 மே 28ஆம் தேதி நீர் மற்றும் காற்றில் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கையை ஏற்று ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதேபோல் ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்த உச்ச நீதிமன்றம், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறியதுடன், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகவும், வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.
2019 பிப்ரவரி 27ஆம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. 2019ஆம் ஆண்டு ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 42 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8ஆம் தேதி, இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்தநிலையில், நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு தொடரும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.