பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி நட்டா என்ற ஜெயப்பிரகாஷ் நட்டா ஒருமனதாக தேர்வு செய்யபட்டார். அவர் கடந்து வந்த பாதை என்ன ?
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் 1960-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி பிறந்த நட்டா பாட்னா கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். சிம்லாவில் உள்ள இமாசலபிரதேச பல்கலைக்கழகத்தில் படித்து சட்டத்தில் பட்டம் பெற்ற இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநில சட்டசபை உறுப்பினராக 1993-ல் முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பின்னர் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. ஆனார். மோடியின் முதல் மந்திரிசபையில் சுகாதார துறை மந்திரியாக உயர்ந்த அவர் மோடி, அமித் ஷா ஆகியோரின் நம்பிக்கைக்குரியவரானர்.
2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சரானதை தொடர்ந்து அமித் ஷா பாஜக தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் 2019 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த பாரதீய ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
அந்த தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பிரமாண்ட கூட்டணி அமைத்ததால், அது பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. அப்போது அந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பிரசாரத்துக்கு தலைமை ஏற்று வெற்றிக்கு வழிவகுத்தவர் ஜே.பி.நட்டா. மொத்தம் உள்ள 80 இடங்களில் 62 இடங்களை பாரதீய ஜனதா கட்சி வென்றெடுத்தது. இதனால் நட்டாவின் செல்வாக்கும் உயர்ந்தது.
பாஜக கட்சியின் அமைப்பு தேர்தல் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது, அதன்படி பாஜக தலைவர் தேர்தல் நடத்தபட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஜேபி நட்டாவின் பெயரை பாஜக நிர்வாகிகள் முன் மொழிந்தனர். மத்திய அமைச்சர்களும் அவரது பெயரை பரிந்துரை செய்தனர். தலைவர் பதவிக்கு ஒரு பெயர் மட்டுமே பரிந்துரை செய்யபட்டதால் ஜே.பி.நட்டா ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். 59 வயதில் கட்சியின் தலைமை பொறுப்பு ஏற்றுள்ள அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.