புல்வாமாவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி: பாகிஸ்தான் உளவுத்துறை வெளியிட்ட தகவலால் பரபரப்பு

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி நடந்துள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புல்வாமாவின் அவந்திபோரா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ வீரர்களை குறிவைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் அவந்திபோராவில் மீண்டும் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. புல்வாமாவில் கடந்த 24ம் தேதி பாதுகாப்புப் படையினரால் தீவிரவாதி ஜாகீர் மூசா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் மற்றும் அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் அரசு தகவல் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டக்கூடாது என்பதால் இந்த தகவலை இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் பகிர்ந்துள்ளதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

Exit mobile version