மாறன் சகோதரர்கள் மீதான சட்டவிரோத பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் 16ம் தேதிமுதல் சாட்சிகள் விசாரணையை நடத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2004 முதல் 2007 வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். அவரது சகோதரருக்கு சொந்தமான சன் தொலைக்கட்சிக்கு பி.எஸ்.என்.எல்.லின் அதிவிரைவு தொலைபேசியின் 700க்கும் மேற்பட்ட இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு 1 கோடியே 78 லட்சத்து 71 ஆயிரத்து 391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ கடந்த 2013ல் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும் சிபிஐ நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடைவிதிக்கவும் மாறன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், விசாரணையை 4 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாறன் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் உச்சநீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்துபி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு இன்று சிபிஐ நீதிமன்ற நீதிபதி வசந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாட்சிகள் விசாரணையை நீதிபதி உத்தரவிட்டார்.
மாறன் சகோதரர்களுக்கு எதிரான அரசு தரப்பு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப ஆணை பிறப்பித்த அவர், முதற்கட்ட சாட்சிகள் விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.