சித்திரை ஆட்டத் திருநாளையொட்டி சபரிமலையில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏராளமான கமாண்டோ படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த மாத ஐப்பசி மாத பூஜையையொட்டி பெண்கள் சபரிமலைக்கு செல்ல முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டதில் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதால், 144 தடை விதிக்கப்பட்டதுடன் பலத்த காவல் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்த நிலையில், சித்திரை ஆட்ட திருநாளையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இன்றும் பெண்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான சூழலால், வழக்கத்திற்கு மாறாக பிற்பகலுக்குப் பிறகே நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முதல் முறையாக சன்னிதானத்தில் பெண் போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்க தீர்மானித்துள்ளனர். இன்று நடை திறக்கப்பட உள்ள நிலையில், சபரிமலையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதால், பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.