கருணாநிதி சிலை திறப்பு விழா- இது நியாயமா ஸ்டாலின்?

திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கு நாளை அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் பல பேர் பங்கேற்க உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பங்கேற்க உள்ளனர். தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அரசியல் வருகையின் போது தன்னை, ‘இத்தாலி பொம்மை’ என்று சொன்ன கருணாநிதியின் சிலையை திறந்துவைக்க சோனியா காந்தி வருவது பெருந்தன்மையாகவோ, சந்தர்ப்பவாதமாகவோ எதுவாகவோ வேண்டுமானாலும் இருக்கட்டும், அதல்ல இங்கு பிரச்னை…

தன்னுடைய தந்தையின் சிலை திறப்பு நிகழ்ச்சி என்றவுடன் ஓடி ஓடிச் சென்று பல மாநில முதல்வர்களை சந்தித்து பேசுகிறார். பிரபலங்களை சந்தித்து பேசுகிறார். கூட்டங்கள் நடத்துகிறார். இவை எல்லாம் தமிழக மக்கள் நலனுக்காகவா செய்கிறார். இல்லை. இவை அனைத்தும் தன்னுடைய சுயலாபத்துக்காகவும், கூட்டணி அரசியல் மூலம் தனக்கான இடத்தை உறுதிசெய்ய வேண்டும், தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்காக அனைத்தையும் முன்னின்று நடத்துகிறார் ஸ்டாலின்.
தன் கூட்டணிக்காக , தன் குடும்பத்திற்காக , தன் சுயநலத்ததிற்காக எதையும் செய்வார் ஸ்டாலின் என்று இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு பக்கம் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்பதாக சொல்லாத ஸ்டாலின், கருணாநிதி சிலையைத் திறக்க சோனியா அழைக்கப்படுவார் என்று சொன்ன டி.கே.எஸ்.இளங்கோவனை அதற்காக செய்தித்தொடர்பாளர் பதவியில் இருந்தே இறக்கிய ஸ்டாலின், இப்போது 5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதே சோனியாவை அதே சிலை திறப்புக்கு சந்தர்ப்பவாதமாக அழைத்திருக்கிறார்,

2009 ஆம் ஆண்டு நம் தமிழ் இனம் இலங்கையில் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர். நம் உடன்பிறவா சகோதர சகோதரிகளின் அவலக் குரல் இலங்கையில் இருந்து தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. அந்த கூட்டணியில் அங்கம் வகித்த திமுகவோ நம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல் தன் குடும்ப உறுப்பினர்களின் அமைச்சர் பதவி பறி போய்விடுமோ என்ற நினைப்பிலேயே கள்ள மவுனம் சாதித்தது.

பெரும்பாலான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவம் ஆர்ப்பரித்தபோது கண்டு கொள்ளாத திமுக, அடுத்த 5 வருடம் கழித்து தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகியது. அதுவும் இனி தங்களுக்கு அந்த கூட்டணியில் முக்கியத்துவம் இல்லை என்று தெரிந்த பின்னர் தான் இந்த முடிவை திமுக எடுத்தது.

தன்னுடைய காங்கிரஸ் கட்சி நிதியாகவும், ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்ளிட்ட அறக்கட்டளைகளின் நிதியாகவும் பலவகைகளில் பணம் சேர்த்தும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக நடிகர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் தன்னால் ஆன உதவிகளைச் செய்தனர். பல்வேறு சிறுமிகள் நீண்ட நாட்களாக சேர்த்து வைத்திருந்த தன்னுடைய உண்டியல் பணத்தை கூட பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவினர். கோடிக்கணக்காண சொத்துக்கள் வைத்திருக்கும் ராஜீவ்காந்தி அறக்கட்டளையை நிர்வகிக்கும் சோனியாகாந்திக்கு நம் தமிழக சிறுமிகளுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இல்லை.

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி செயல்பட சொல்லாத சோனியா காந்தி, கர்நாடக அரசின் அணைத் திட்டங்களை ஆழ்மனதில் மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்க்கும் சோனியா காந்தி, 7 தமிழர்களின் விடுதலையை நெடுங்காலம் தட்டிக் கழித்து, இப்போது அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கக் காரணமான சோனியா காந்தி, இப்போதும் ராகுல் காந்தி எழுவரை மன்னித்துவிட்டதாக உதட்டளவில் கூற, கட்சிக்காரர்களைக் கொண்டு எழுவர் விடுதலைக்கு எதிராக வழக்குகளையும் நடத்தும் காங்கிரஸின் பொறுப்புமிக்க தலைவர் சோனியா காந்தி தமிழக மண்ணில் கால்வைக்க உண்மையிலேயே தகுதியானவர்தானா?. தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

சிலை திறப்பு விழா குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் ” சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை, தலைவர் கருணாநிதி கட்டிக்காத்த மதசார்பற்ற, முற்போக்கு, சமூகநீதி, ஜனநாயக கொள்கைகளின் முழக்கமாக அமையும். அது இந்தியா எதிர்கொள்ளப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் தமிழ்நாடு காணவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் நமக்கான வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த போது கைகட்டி வேடிக்கை பார்த்த ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்கவே இந்த விழா நடத்தப்படுவைதை பார்க்கும் போது தமிழக மக்களின் நலனை விட தங்கள் கட்சி மற்றும் குடும்பத்தின் நலனே முக்கியம் என்று ஸ்டாலின் நினைப்பதை கண்கூடாக தெரிந்து கொள்ளலாம். மக்கள் மறந்தாலும் இலங்கையில் உயிரிழந்த நம் தமிழர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது ஸ்டாலின்.

காவிரி முதல் ஈழம் வரை தமிழகம் தற்போது சந்தித்துவரும் அனைத்து சிக்கல்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருக்கும் காங்கிரசையும், அதன் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் தமிழகத்தில் கால்வைக்க விடுவது தமிழர்களுக்கு மாபெரும் அவமானம். சோனியா காந்தி என்று அழைக்கப்படும் எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோவைத் திரும்பிப் போகவைப்போம், அவரைத் தமிழகத்திற்கு அழைத்த திமுகவைப் புறக்கணிப்போம். தமிழகத்தின் மாண்பைக் காப்போம்.

Exit mobile version