திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு என கருதி இடிக்கப்பட்ட பழமையான மாரியம்மன் கோவிலுக்கு பதில் மாற்று இடத்தில் புதிய கோவில் கட்டிக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. அப்போது, சோனநந்தி தோப்பு என்னும் இடத்திற்கு எதிரில் அமைந்திருந்த 60 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு என கருதி தவறுதலாக இடிக்கப்பட்டது. இதை எதிர்த்தும், புதிய கோவில் கட்டித் தரக் கோரியும் திருவண்ணாமலையை சேர்ந்த சிவபாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, இது தொடர்பாக விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கிரிவலப் பாதையை அகலப்படுத்த இருப்பதால் மாற்று இடத்தில் கோயிலை கட்டித்தர தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆறு மாதங்களில் மாற்று இடத்தில் கோவில் கட்டிக் கொடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.