பழமையான ஆலமரம் வேருடன் பிடுங்கப்பட்டு மற்றொரு இடத்தில் மீண்டும் நடப்பட்டது

சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக 100 ஆண்டுகளுக்கும் பழமையான ஆலமரம் வேரோடு பிடுங்கி கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் மறுநடவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் பழமையான ஆலமரம் இருந்தது.

சென்னை – தடா வரையிலான சாலை 6 வழிச் சாலையின் விரிவாக்க பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் சுற்றுச்சூழல் அமைப்பு உதவியுடன் பழமையான ஆலமரத்தை வேரோடு பிடுங்கி கொசஸ்தலை ஆற்றின் கரையில் மறுநடவு செய்ய திட்டமிட்டது. கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இதற்காக குழி தோண்டிப்பட்டது.

ஆலமரத்தை வேரோடு பிடுங்கும் முயற்சியில் நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, காவல் துறை மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் இணைந்து ஆலமரத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

15 டன் எடை கொண்ட ஆலமரத்தின் கிளைகள் முதலில் சிறிது சிறிதாக வெட்டப்பட்டது. பின்னர் மரம் வேறுடன் பிடுங்கப்பட்டு, லாரியில் ஏற்றி, கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பொக்லைன், கிரேன் உள்ளிட்ட இயந்திரங்களின் உதவியுடன் ஆற்றின் கரையோரம் தோண்டப்பட்ட குழியில் ஆலமரம் மறுநடவு செய்யப்பட்டது.

100 ஆண்டுகளுக்கும் பழமையான ஆலமரம் வெட்டி சாய்க்காமல் மீண்டும் அதனை மறுநடவு செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version