இரண்டு நாட்கள் மட்டுமே சந்தித்த இளைஞரை தத்தெடுத்து தாயாக மாறிய செவிலியர்

இரண்டு நாட்கள் மட்டுமே சந்தித்த ஒரு இளைஞரை, தத்தெடுத்து அவரது உயிரைக் காப்பாற்றிய ஜார்ஜிய செவிலியரின் அன்பு இணைய தளவாசிகளால் பெரிதும் வியக்கப்படுகின்றது.

ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கும் பொதுவாக உள்ள நாடு ஜார்ஜியா, இது முன்னர் சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்தது. இங்கு நடந்த ஒரு சம்பவம்தான் தற்போது உலகெங்கும் உள்ள மக்களை நெகிழ்ச்சிக்கு ஆளாக்கி வருகின்றது. ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனைக்கு ஜோனதான் பின்கார்டு என்ற 27 வயது இளைஞர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட அவர் உறவினர்கள் யாரும் இல்லாமல் மறுவாழ்வு மையத்தில் வசித்து வந்தவர், இதனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லை என்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை முன்வரவில்லை.

இதைக் கடந்த ஆண்டு டிசம்பரில் அவரைப் பார்த்துக் கொள்ள மருத்துவமனையால் நியமிக்கப்பட்ட லாரிவுட் என்ற செவிலியர் பார்த்தார். அவரால் ஜோனதான் துன்பப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் உடனே ஜோனதானைத் தத்து எடுத்துக் கொண்டு தனது பிள்ளைகளுடன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கடந்த ஜனவரி மாதம் முதல் லாரியின் மகனாக வாழத் தொடங்கிய ஜோனதானுக்குக் கடந்த ஆகஸ்டு மாதம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர் லாரிவுட்டின் கண்காணிப்பின் கீழ் அவர் தற்போது முழு உடல்நலம் அடைந்துள்ளார்.

இரண்டு நாட்கள் மட்டுமே சந்தித்த ஒருவரைத் தத்தெடுத்து லாரிவுட் காப்பாற்றியதை அறிந்த வெளி உலகம் அவரை வெகுவாகப் பாராட்டிவருகின்றது. ஆனால், ஜோனதானுக்கு வீட்டில் ஒரு அறையை ஒதுக்கியதைத் தவிர வேறு எதையும் தான் பெரிதாக செய்துவிடவில்லை என்று பாராட்டுகளை மென்மையாக மறுக்கிறார் லாரிவுட். தனக்கு மறு வாழ்வும் அம்மாவும் கிடைத்துவிட்டதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் ஜோனதானின் மகிழ்ச்சி எப்போதும் நிலைக்கப் பாடுபட உள்ளதாகத் தெரிவிக்கிறார் லாரிவுட்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பலர் உறவுகளின் அன்பை மறந்து ஒடிக்கொண்டிருக்கும் நிலையில், அன்பு என்பது அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை அழகாகவும் ஆழமாகவும் உலகுக்கு உணர்த்துகிறது இந்த நெகிழ்ச்சி சம்பவம். இதனால் லாரிவுட்டின் அன்பினையும் அவரது சேவையினையும்கொண்டாடிவருகின்றனர் இணையவாசிகள்.

Exit mobile version