ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.  இதையொட்டி 30 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 77 புள்ளி 10 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77 புள்ளி 73 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.   

தேர்தலில் பதிவான வாக்குகள்  இன்று  315   மையங்களில் எண்ணப்படுகிறது.  காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், 30 ஆயிரத்து 354 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குகள்   எண்ணப்படுவதை ஒளிப்பதிவு செய்ய  கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  அடையாள அட்டை வழங்கப்பட்ட வேட்பாளர்களின் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கையின் போது உள்ளே அனுமதிக்கப்படுவர்.   

 முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் கைபேசிகளை வாக்கு எண்ணும் மையத்திற்குள் எடுத்து செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version