துணை வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள துணை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு தொடர்பாக, கடந்த 6ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, புதிய பெயர்கள் சேர்க்கப்பட்ட பின் தயாரிக்கப்பட்டுள்ள துணை வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.
துணை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 257 ஆண்களும், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பெண்களும் இடம்பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 5 ஆயிரத்து 924 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில், 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை மட்டும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 571 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.