27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்றும் நீடிக்கிறது.
தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடங்களும், 314
ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களும், 9,624 ஊராட்சித் தலைவர் பதவி இடங்களும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும். தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 315 மையங்களில் நேற்றுக் காலை 8 மணிக்குத் தொடங்கியது.
ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன.
முதலில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கான முடிவுகளும், அதைத்தொடர்ந்து ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான முடிவுகளும் வெளியாயின. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இரவிலும் நீடித்தது.
இதனால் அவற்றுக்கான முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. வாக்குச் சீட்டு முறை என்பதாலும், ஒவ்வொரு ஊராட்சி வாரியாக வாக்குகளை எண்ணுவதாலும், முகவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாலும் வாக்கு எண்ணிக்கை இரவிலும் நீடித்தது. இரவு எண்ணி முடிக்கப்படாத வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை இன்று காலையிலும் தொடர்கிறது.